நெல்லை சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் குளம் தூர்வாரும் பணி: முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கிவைத்தார்


நெல்லை சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் குளம் தூர்வாரும் பணி: முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:15 PM GMT (Updated: 12 Aug 2019 7:11 PM GMT)

நெல்லை சந்திப்பில் உள்ள உடையார்பட்டி குளம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூர்வாரப்படுகிறது. இந்த பணியை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கிவைத்தார்.

நெல்லை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பிலும் ஒவ்வொரு குளத்தை தூர்வார வேண்டும் என்றும் மாநில தலைவர் அழகிரி அறிவித்து இருந்தார். அதன்படி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நெல்லை சந்திப்பு உடையார்பட்டி குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று அந்த குளத்தை தூர்வாரும் பணியை மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கிவைத்தார். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் குளம் தூர்வாரி சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில், இந்த குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் செய்கிறோம். குளத்தை ஆழப்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், விவசாயம் செழிக்கும். இந்த குளத்திற்கு நயினார்குளத்தில் இருந்து தண்ணீர் வருகின்ற கால்வாய் பகுதியில் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் தங்கு தடையில்லாமல் வருவதற்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும். இல்லை எனில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.ராமசுப்பு, நெல்லை கிழக்கு மாவட்ட சக்தி ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story