நெல்லை மேலப்பாளையத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை: திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு


நெல்லை மேலப்பாளையத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை: திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 10:00 PM GMT (Updated: 12 Aug 2019 7:11 PM GMT)

நெல்லை மேலப்பாளையத்தில் பக்ரீத் பெருநாளையொட்டி நேற்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

நெல்லை,

பக்ரீத் பெருநாளையொட்டி நேற்று முஸ்லிம் மக்கள் சிறப்பு தொழுகை நடத்தி கொண்டாடினார்கள். மேலப்பாளையம் ஜின்னா திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம் பொது மக்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். புத்தாடை உடுத்தி, ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய பிரசார பேரவை சார்பில் மேலப்பாளையத்தில் 2 இடங்களில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது. பஜார் திடலில் நடைபெற்ற தொழுகையை மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா நடத்தி வைத்து பேசினார். அலங்கார் தியேட்டர் வளாக திடலில் நடைபெற்ற தொழுகையை இஸ்லாமிய பிரசாரகர் ஹாமீம் நடத்தி வைத்து பேசினார். அப்போது அவர், “நபி இப்ராகிம், அவரது மகனார் நபி இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையில், நாமும் தியாகம் செய்யும் மக்களாக வாழ வேண்டும்” என்றார்.

இந்த தொழுகையில் த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், செயலாளர் அலிப் பிலால், கட்சி மாவட்ட செயலாளர் ஜமால், துணை செயலாளர்கள் ஷேக், ரசூல், கம்புகடை ரசூல், மேலப்பாளையம் பகுதி தலைவர் மைதீன், செயலாளர் பாதுஷா, ம.ம.க. பகுதி செயலாளர் காஜா, பொருளாளர் அசன் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மேலப்பாளையம் கரீம் நகரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சாகுல் அமீது உஸ்மானி பெருநாள் குத்பா உரையாற்றினார். மீரான் முகைதீன் அன்வாரி தொழுகையை நடத்தினார். இதில் மஸ்ஜிதுல் ஹூதா நிர்வாக குழு பொருளாளர் ஜவஹர் அலி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மாவட்ட தலைவர் கனி, நிர்வாகிகள் லெப்பை, மின்னத்துல்லா, புகாரி மற்றும் ஜமாத்தார்கள், பெண்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில் உள்ள ஈத்கா திடலில் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள சிந்தா மதார்ஷா தைக்கா ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று காலை சிறப்பு தொழுகையும், மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது. பள்ளிவாசல் இமாம் ஜலாலுதீன் ஆலிம் தலைமையில் தொழுகை நடைபெற்றது.

இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதே போல் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் அமைப்பு, கட்சிகள் சார்பில் பல்வேறு நகரங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. மேலும் ஆடு, மாட்டு இறைச்சிகளை பகிர்ந்து குர்பானியும் கொடுத்து மகிழ்ந்தனர்.

Next Story