5 மாதமாக சம்பளம் வழங்காததால் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


5 மாதமாக சம்பளம் வழங்காததால் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 7:13 PM GMT)

5 மாதமாக சம்பளம் வழங்காததால் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனைக்கு, சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில், 50 பெண்கள் உள்பட 96 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையில் சேர்ந்தனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 400 வீதம் மாதம் ரூ.12 ஆயிரம் என்றும், இதில் பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ. பிடித்தம் போக மீதம் மாதந்தோறும் ரூ.8500 வழங்குவதாக தெரிவித்தனர்.

ஆனால் வேலைக்கு சேர்ந்து 5 மாதங்களாகியும் சம்பளம் வழங்காததால், தனியார் நிறுவன அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் தனியார் நிறுவன அதிகாரிகள், மருத்துவத்துறையிலிருந்து தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வரவில்லை வந்தால் தான் தர முடியும் என்று பதில் கூறினர்.

உள்ளிருப்பு போராட்டம்

பின்னர் நேற்று முன்தினம் தனியார் நிறுவன அதிகாரிகளிடம் கேட்கும் போது, இன்னமும் நிதி வரவில்லை, அதனால் சம்பளம் வழங்கவில்லை. விரைவில் வந்து விடும் என்றனர். 5 மாதங்களாக சம்பளம் வழங்காததால் தங்கள் குடும்பம் கஷ்டப்படுவதாக தெரிவித்தனர். மேலும் ஆத்திரம் அடைந்த 96 ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென பணிகளை புறக்கணித்து, மருத்துவமனை வளாகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த மருத்துவமனை நிலைய அலுவலர் செல்வம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜிடம் குறைகளை கூற அறிவுறுத்தினர். அதன் படி போராட்டக்காரர்கள், முதல்வர் குமுதாலிங்கராஜிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்2 நாட்களுக்குள் ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும், எனவே போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு செல்லுங்கள் என்று உத்திரவாதம் அளித்ததின் பேரில் போராட்டத்தை வாபஸ் பெற்று வேலைக்கு திரும்பினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story