மதுரை பெட்ரோல் பங்கில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற கண்டக்டர் உள்பட 2 பேர் சிக்கினர்


மதுரை பெட்ரோல் பங்கில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற கண்டக்டர் உள்பட 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 7:29 PM GMT)

மதுரையில் உள்ள பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற அரசு பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் சிக்கினர்.

மதுரை,

மதுரை ஆத்திக்குளம் கங்கை தெருவை சேர்ந்தவர் ரவி. அவருடைய மகன் பிரசன்னா (வயது 27), அரசு பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று இவர் நத்தம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சென்றார். அங்கு பெட்ரோல் போட்ட பின்பு இரண்டு 50 ரூபாய் நோட்டுகளை அங்கிருந்த ஊழியரிடம் கொடுத்தார். அவர் நோட்டை வாங்கி பார்த்த போது அது கள்ள நோட்டு போன்று இருந்தது. உடனே பிரசன்னாவை அங்கிருந்தவர்கள் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விரைந்து வந்து பிரசன்னாவை பிடித்து விசாரித்தனர். மேலும் அந்த நோட்டை சோதனை செய்து பார்த்த போது அது கள்ள நோட்டு என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார் பிரசன்னாவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்து ரூ.100 கள்ளநோட்டுகள் 9, ரூ.50 கள்ளநோட்டு 1 ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்து, அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார், பிரசன்னாவிற்கு எப்படி கள்ள நோட்டுகள் கிடைத்தது? என்பது குறித்து விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் பிரசன்னா கூறியதாவது:-

என்னுடைய தந்தை நோய்வாய்ப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க எனது சம்பளம் போதுமானதாக இல்லை. எனவே நான் இரவு முழுவதும் கண்டக்டர் வேலை செய்ததால், கூடுதல் சம்பளம் கிடைக்கும். அதனால் நான் எப்போதும் இரவுப்பணி தான் அதிகம் பார்ப்பேன். அந்த பணமும் சிகிச்சைக்கு போதவில்லை என்பதால் அதிகமாக கடன் வாங்கினேன். அப்போது தான் கீரைத்துறையை சேர்ந்த பால் வியாபாரி மணிகண்டன் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் 500 ரூபாய் நல்ல நோட்டுகள் கொடுத்தால் 1000 ரூபாய்க்கு கள்ள நோட்டுகள் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

எனவே தந்தையின் சிகிச்சைக்காக அவரிடம் 500 ரூபாய் கொடுத்து 1000 ரூபாய்க்கு கள்ள நோட்டுகள் வாங்கினேன். அதனை முதன் முதலாக பெட்ரோல் பங்கில் கொடுத்து மாற்றிய போதுதான் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பிரசன்னா கூறிய தகவலின் அடிப்படையில் போலீசார் கீரைத்துறை பகுதிக்கு சென்று அங்கிருந்த மணிகண்டனை கைது செய்து விசாரித்தனர்.

அவரிடம் கள்ள நோட்டுகள் எதுவும் இல்லை. ஆனால் மணிகண்டன் தனக்கு சிந்தாமணியை சேர்ந்த விஜய் என்பவர்தான் அந்த பணத்தை கொடுத்ததாக கூறினார். எனவே அவரை பிடிக்க போலீசார் சென்ற போது அவர் தப்பி சென்றுவிட்டார்.

விஜயை பிடித்தால்தான் அவருக்கு கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது? என்ற தகவல் தெரியவரும். மதுரையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட காரணமான கும்பல் யார், அவர்களுக்கு யார்?, யாருடன் தொடர்பு உள்ளது? குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story