திருச்சி ஜங்ஷன் யார்டில் ரெயில்வே பெண் ஊழியரிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு போலீசார் விசாரணை


திருச்சி ஜங்ஷன் யார்டில் ரெயில்வே பெண் ஊழியரிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Aug 2019 10:15 PM GMT (Updated: 12 Aug 2019 7:38 PM GMT)

திருச்சி ஜங்ஷன் யார்டில் ரெயில்வே பெண் ஊழியரிடம் 4 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் பாமா(வயது 59). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டார். பாமா, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய யார்டில் தொழில்நுட்ப பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பாமா திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில் நேற்று காலை யார்டில் தண்டவாளத்தை கடந்து மறுபுறம் கிராப்பட்டிக்கு செல்ல முயன்றபோது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை மர்மநபர் ஒருவர் பறித்து சென்றதாக கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு சற்று தள்ளி பணியில் இருந்த ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

4 பவுன் சங்கிலி பறிப்பு

இதற்கிடையில் புகார் கொடுத்த பாமாவிடம் சங்கிலியை பறித்த நபர் குறித்து விசாரித்தனர். மேலும் 4 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்த போது பாமாவின் கழுத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா? அவர் எந்த பக்கம் தப்பி ஓடினார் என விசாரணை நடத்தினர்.

இதில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடியதாக தெரிவித்தார். சங்கிலியை பறித்த போது அவரது கழுத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிந்தது.

இந்த நிலையில் சங்கிலி பறிப்பு சம்பவம் உண்மையானது தானா? அவர் சங்கிலி பறிபோனதாக நாடகமாடுகிறாரா? எனவும், சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படும் மர்மநபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ஜங்ஷன் யார்டில் பட்டப்பகலில் ரெயில்வே பெண் ஊழியரிடம் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story