சிறுமலையில் பட்டாம்பூச்சி பூங்கா - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்


சிறுமலையில் பட்டாம்பூச்சி பூங்கா - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 8:27 PM GMT)

சிறுமலையில் மூங்கில், பட்டாம்பூச்சி பூங்காங்கள் அமைத்து சுற்றுலாதலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுமலை அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை வனப்பகுதியில் அரியவகை மூலிகை செடிகள், தாவரங்கள் அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டன. இங்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது 536 உயிர் தாவரங்கள், 895 சிற்றின தாவரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சிறுமலை வனப்பகுதியில் உள்ள அரிய வகை தாவரங்களின் எண்ணிக்கையை பெருக்கும் வகையில், ரூ.5 கோடியில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து பூங்கா அமைய உள்ள இடமும் தேர்வு செய்யப்பட்டது.

இந்த இடத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் மருதராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.

பல்லுயிர் பூங்கா அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட பிறகு அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறுமலையில் பல்லுயிர் பூங்கா அமைவதன் மூலம் அரியவகை மூலிகை செடிகள், தாவரங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மூங்கில் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, சிறுவர்-சிறுமிகளுக்கான பூங்கா என தனித்தனியாக பூங்காக்கள் அமைக்கப்பட இருக்கிறது.

இதுமட்டுமின்றி பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் விடுதிகள், உணவகங்கள், வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன. இதேபோல் சிறுமலை பகுதியை சுற்றுலா தலமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறுமலையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த வனப்பகுதியில் உள்ள மரங்களை இதுவரை வெட்டி கடத்த எவரும் முயன்றதில்லை. பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்றால் கூட கலெக்டரின் அனுமதியை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story