சத்துவாச்சாரியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான தகராறில் வாலிபர் குத்திக்கொலை - நண்பர்கள் 4 பேர் கைது

சத்துவாச்சாரியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த கொளத்தூர் குப்பம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் பரத் என்கிற பாரத் (வயது 26). இவர், வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரில் உள்ள அவருடைய அத்தை வீட்டில் தங்கி மாட்டு வண்டி வைத்து தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர்கள் ரவி (26), சந்தோஷ் (24), முரளி (22), குமார் (21).
பரத் மற்றும் நண்பர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் வ.உ.சி.நகர் மலையடிவாரத்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவது தொடர்பாக பேசி உள்ளனர். அப்போது பரத் தனது அத்தை வீட்டின் அருகே விநாயகர் சிலை வைக்க வேண்டும் என்று கூறி உள்ளார். ஆனால் அதற்கு மற்ற 4 பேரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் பகுதியில் விநாயகர் சிலை வைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ரவி, சந்தோஷ், முரளி, குமார் ஆகிய 4 பேரும் பரத்தை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து பரத் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை 4 பேரும் விரட்டி சென்று தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர்.
அப்போது பரத் தடுமாறி கால்வாயில் விழுந்து அலறி துடித்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத 4 பேரும் பெரிய கற்களை அவரின் உடல் மீது போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய 4 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த ரவி, சந்தோஷ், முரளி, குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் சிலை வைப்பது தொடர்பான தகராறில் வாலிபரை நண்பர்கள் 4 பேரும் கொலை செய்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story