சுதந்திர தின விழாவையொட்டி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


சுதந்திர தின விழாவையொட்டி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 8:30 PM GMT)

சுதந்திர தின விழாவையொட்டி கன்னியா குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி,

இந்தியா முழுவதும் சுதந்திர தின விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.அதன்படி குமரி மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் விடுதிகளில் தங்கி உள்ளனரா? என்று போலீசார் விடுதிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 72 கி.மீ. தூர கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 48 கடலோர மீனவ கிராமங்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

Next Story