மாவட்ட செய்திகள்

தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு, சாலையில் தேங்கிய தண்ணீரை சேகரித்து பயன்படுத்தும் பொதுமக்கள் + "||" + Civilians who collect and use stagnant water on the road

தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு, சாலையில் தேங்கிய தண்ணீரை சேகரித்து பயன்படுத்தும் பொதுமக்கள்

தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு, சாலையில் தேங்கிய தண்ணீரை சேகரித்து பயன்படுத்தும் பொதுமக்கள்
திண்டுக்கல்லில், 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் சாலையில் தேங்கிய தண்ணீரை குடங்களில் சேகரித்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் கக்கன்நகர், இந்திராநகர் பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்து, 15 நாட்களுக்கு மேலாகி விட்டது.

இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. நீண்ட தூரம் சென்று பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பதிக்கப்பட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது.

இந்த நிலையில் கக்கன்நகர் பாரதி நடுநிலைப்பள்ளி அருகே உள்ள குடிநீர் குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக சாலையில் தேங்கி நின்றது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், சாலையில் தேங்கி நின்ற தண்ணீரை குடங்களில் சேகரித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதிக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் நாங்கள் தவித்து வந்தோம். இந்த நிலையில் தான் இன்று (அதாவது நேற்று) குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் தேங்கியது.

கலங்கிய நிலையில் சுத்தமின்றி அந்த தண்ணீர் இருந்தாலும் வேறு வழியில்லாததால் அந்த தண்ணீரை குடங்களில் சேகரித்து பயன்படுத்தி வருகிறோம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறியது. தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகளும் விரைந்து வந்து சீரமைத்தனர். தற்போது மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே குழாயில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.