மேட்டூர் அணை வரலாற்றில் 86-வது தடவையாக இன்று தண்ணீர் திறப்பு


மேட்டூர் அணை வரலாற்றில் 86-வது தடவையாக இன்று தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 11:30 PM GMT (Updated: 12 Aug 2019 10:37 PM GMT)

மேட்டூர் அணை வரலாற்றில் 86-வது தடவையாக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு 4 முறை அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சேலம்,

கேரள, கர்நாடகா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் இந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 2.5 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, நேற்று 90 அடியை தாண்டிவிட்டது.

இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பண்ணன், வி.சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

இதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அதன் பின்னர் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. எனினும் அதன்பிறகும் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் மேட்டூர் அணை நிரம்புவதும், தண்ணீர் குறைவதுமாக இருந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் அடுத்தடுத்து 4 முறை நிரம்பியது. தற்போதைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில், இன்னும் ஒரு வாரத்திற்குள் மேட்டூர் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை வரலாற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) 86-வது தடவையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. அதாவது 1934-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு, முதல் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதுவரை 85 முறை காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று 86-வது தடவையாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் 16 முறை குறிப்பிட்ட தினமான ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் 10 ஆண்டுகள் ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்பாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 11 ஆண்டுகள் தாமதமாகவே மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் ஜூலை 19-ந் தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்போது, அணையின் மின்நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கல்மேடு, கோனேரிப்பட்டி ஆகிய 5 கதவணைகள் மூலம் 150 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யமுடியும். மொத்தம் 400 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய முடியும். இதனால் தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story