தவளக்குப்பம் அருகே லாரி, கார்கள் அடுத்தடுத்து மோதல்; போக்குவரத்து பாதிப்பு


தவளக்குப்பம் அருகே லாரி, கார்கள் அடுத்தடுத்து மோதல்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 11:15 PM GMT (Updated: 12 Aug 2019 11:15 PM GMT)

தவளக்குப்பம் அருகே ஒரு லாரி மற்றும் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. அதனால் புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாகூர்,

சீர்காழி அருகே ராஜாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகஜீவன்ராம் (வயது 28). இவர் நேற்று புதுச்சேரிக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். அவருடைய கார் கடலூர்-புதுச்சேரி ரோட்டில் தவளக்குப்பத்தை அடுத்த எடையார்பாளையம் அருகே சென்றபோது அவருடைய காரை ஒரு கார் வேகமாக முந்திச்செல்ல முயன்றது. அந்த கார் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக ஜெகஜீவன்ராம் தன்னுடைய காரின் வேகத்தை குறைத்தார். அப்போது அவருடைய காரின் பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி மோதியது. லாரி மோதிய வேகத்தில் இவரது முன்னால் சென்ற கார் மீது மோதியது. அந்த கார் அதற்கு முன்னால் சென்ற கார் மீது மோதியது என அடுத்தடுத்து தொடர்ந்து 4 கார்கள் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஜெகஜீவன்ராமின் கார், தென்காசியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரின் கார், புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த வேல் முருகன் ஓட்டிச் சென்ற கார், வில்லியனூர் திருக்காஞ்சியை சேர்ந்த மணவாளதாஸ் ஓட்டிச் சென்ற கார் ஆகிய 4 கார்கள் சேதமடைந்து நடுரோட்டில் நின்றன.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கார்கள் மட்டும் சேதமடைந்தன.

அதன் காரணமாக கடலூர்-புதுச்சேரி ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது. எப்போதும் மிகவும் பரபரப்பாக வாகனங்கள் சென்று வரும் இந்த ரோட்டில் போக்குவரத்து தடைபட்டதால் சிறிது நேரத்திலேயே ஏராளமான வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

அதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், போலீஸ் ஏட்டு செஞ்சிவேல் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளாகி நின்ற கார்களை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு கடலூர்-புதுச்சேரி ரோட்டில் மீண்டும் படிப்படியாக போக்குவரத்து சீரானது.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story