மாகி-ஏனாமில் கனமழை: வெள்ள நிவாரண பணிகள் குறித்து நாராயணசாமி ஆலோசனை


மாகி-ஏனாமில் கனமழை: வெள்ள நிவாரண பணிகள் குறித்து நாராயணசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 13 Aug 2019 5:00 AM IST (Updated: 13 Aug 2019 4:48 AM IST)
t-max-icont-min-icon

மாகி, ஏனாமில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

புதுச்சேரி,

தென்மேற்கு பருவமழை கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கொட்டி வருகிறது. இந்த மழை காரணமாக கேரளாவில் உள்ள புதுவை பிராந்தியமான மாகியும், ஆந்திர மாநிலத்தையொட்டியுள்ள புதுவை பிராந்தியமான ஏனாமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஏனாமில் பல வீடுகளுக்குள் கோதாவரி ஆற்றின் வெள்ளம் புகுந்துள்ளது. மழைநீர் தேங்கிய பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மாகி பகுதியிலும் காற்று மழை காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாகி, ஏனாம் பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், அரசு செயலாளர் அசோக்குமார், கலெக்டர் அருண், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது வெள்ள சேத விவரங்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டறிந்தார். அவரிடம் மாகி, ஏனாம் நிலைமை குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

Next Story