உத்தரகன்னடா அருகே தடுப்பணை உடைந்தது; 2 கிராமங்கள் நீரில் தத்தளிப்பு


உத்தரகன்னடா அருகே தடுப்பணை உடைந்தது; 2 கிராமங்கள் நீரில் தத்தளிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 11:29 PM GMT (Updated: 12 Aug 2019 11:29 PM GMT)

உத்தரகன்னடா அருகே தடுப்பணை உடைந்தது. இதனால் 2 கிராமங்கள் நீரில் தத்தளிக்கிறது. மேலும் 5 ஆயிரம் ஏக்கர் நெல், மக்காச்சோள பயிர்கள் நாசமானது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் உத்தரகன்னடா (கார்வார்) மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு அந்த மாவட்டத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்கள் மழை பாதித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகன்னடா மாவட்டத்தில் 93 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, அங்கு வீடுகளை இழந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உத்தரகன்னடா மாவட்டம் முண்டர்கோடு அருகே பானுகிலி கிராமத்தில் உள்ள சிக்கிள்ளி தடுப்பணை நேற்று மதியம் திடீரென்று உடைந்ததால் அனுமாபுரா, அஜ்ஜள்ளி ஆகிய 2 கிராமங்களுக்குள் புகுந்து தத்தளித்தது. 50-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. இதன் காரணமாக அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். பின்னர் மீட்பு குழுவினர் அங்கு சென்று அந்த வீடுகளில் வசித்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. அந்த தடுப்பணை விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை சேமித்து வைக்க மட்டுமே கடந்த சில ஆண்டுகளுக்கு கட்டப்பட்டது. தடுப்பணை உடைந்ததன் காரணமாக, அதனை சுற்றியுள்ள 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல், மக்காச்சோள பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது.

இதற்கிடையில், தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஹரிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, உடைப்பை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Next Story