124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை நிரம்பியது; வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு


124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை நிரம்பியது; வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு
x

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை நேற்று நிரம்பியது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் அணையில் முதல்-மந்திரி எடியூரப்பா பூஜை நடத்த உள்ளார்.

மைசூரு, 

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மலைநாடு, கடலோர கர்நாடகம், வடகர்நாடக பகுதிகளில் கொட்டி தீர்த்து வருகிறது. கடும் மழை, வெள்ளம் காரணமாக மைசூருவில் உள்ள கபினி, மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதுபோல் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் கனமழை பெய்தது. இதனால் இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இதனால் இரு அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களாக தமிழகத்திற்கு வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் சென்றது. நேற்று முன்தினம் அணைகளுக்கு அதிகப்படியான நீர் வந்தது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு வினாடிக்கு 2.73 லட்சம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றங்கரையோர கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

இந்த நிலையில் நேற்று கே.ஆர்.எஸ். அணை முழுகொள்ளளவையும் (நீர்மட்டம்-124.80 அடி) எட்டியது. நடப்பு ஆண்டில் முதல் தடவையாக தற்போது கே.ஆர்.எஸ். அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 4 ஆயிரத்து 200 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 2 லட்சத்து 4 ஆயிரத்து 200 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் பாண்டவபுரா, ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாக்களில் உள்ள மாரிகவுடன உண்டி, தொட்டபாளையா, சிக்கபாளையா, ஹனகரஹள்ளி, தொட்டகவுடன கொப்பலு, ராமப்புரா, கெங்கேரி காப்பலு, மாரலகலா, சீனிவாச அக்ரஹாரா, மகாதேவபுரா, மேலப்புரா, பசிமவாகினி, கஞ்சாம், சென்னஹள்ளி, பீதரஹள்ளி உண்டி, கெரேகுரா, பொம்மரு அக்ரஹாரா உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் வசித்து வந்த மக்கள் அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணைக்கட்டுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பிருந்தாவன் கார்டன் பூங்காவுக்குள்ளும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புக்காக அணை பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இரவில் அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறும் பகுதியில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதை பார்க்கவும் கூட்டம், கூட்டமாக மக்கள் வந்து செல்கிறார்கள். அதுபோல் ஸ்ரீரங்கப்பட்டணாவில் இருந்து பாண்டவபுரா செல்லும் ரோட்டில் உள்ள ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான வெஸ்லி பாலத்தை தொட்ட படி காவிரி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடும் காட்சியையும் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் செல்போன்களிலும் அந்த காட்சியை படம் பிடித்து செல்வதை காண முடிகிறது.

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ககனசுக்கி, பரசுக்கி நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதை பார்க்க மக்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. தற்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பறவைகள் சரணாலயம் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. மேலும் வெள்ளத்தில் பறவைகளின் கூடுகள், முட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுபோல் பல நூறு சிறிய பறவைகளும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. காவிரி ஆற்று வெள்ளத்தால் சாம்ராஜ்நகர், கொள்ளேகால் பகுதிகளிலும் சில கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

அதே வேளையில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கபினி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்துவிட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2,284.80 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக இருந்தது. அணைக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 35 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2.39 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு செல்கிறது.

கபினியில் திறக்கப்பட்டுள்ள நீர் கபிலா ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் டி.நரசிப்புரா, நஞ்சன்கூடு உள்ளிட்ட தாலுகாக்களில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கே.ஆர்.எஸ். அணை எப்போது நிரம்பினாலும், முதல்-மந்திரி அங்கு வருண பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தி, நவதானியங்கள் அடங்கிய முரத்தில் வைத்து அணை நீரில் விடுவது வழக்கம். தற்போதும் கே.ஆர்.எஸ். அணை நிரம்பியுள்ளதால், முதல்-மந்திரி எடியூரப்பா விரைவில் அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை காவிரி நீர்வாரிய கழக அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.


Next Story