எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் குடிநீர்-தெருவிளக்கு வசதிகள் செய்துதர வலியுறுத்தல்


எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் குடிநீர்-தெருவிளக்கு வசதிகள் செய்துதர வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 5:35 PM GMT)

எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் குடிநீர், தெருவிளக்கு வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்துதரவேண்டும் என்று தொழில்முனைவோர் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் 44 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழில்பேட்டை உள்ளது. இங்கு ஏறத்தாழ 92 தொழிற்கூடங்கள் உள்ளன.இதில் 40-க்கும் மேற்பட்ட வற்றில் உற்பத்தி மற்றும் பணிமனை சார்ந்த தொழில்கூடங்கள் இயங்கி வருகின்றன. மேலும் பல புதிய தொழில்கூடங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் சிட்கோ தொழில்பேட்டையின் பிரதான கிரில் கதவை சிலர் கடந்த 2013-ம் ஆண்டில் உடைத்து பெயர்த்து எடுத்து விட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக பிரதான வாயிலுக்கு கிரில் கதவு பொருத்தப்படாமலேயே உள்ளது. மேலும் காவலாளிகள் எவரும் பணியில் அமர்த்தப்படவில்லை. தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 9 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமலேயே உள்ளது. அன்றாடம் ஒவ்வொரு தொழிற் கூடத்திற்கும் குடிநீர் வழங்கவும், கடந்த பல மாதங்களாக எரியாமல் உள்ள மின்கம்பங்களை சீரமைத்து தெருவிளக்குகள் எரியவைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிட்கோ தொழில்கூட உரிமையாளர்கள் சங்கத்தினர் மாநில சிட்கோ இயக்குனருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலியுறுத்தல்

எம்.ஜி.ஆர். நகர், பிரம்மதேசம் சாலை மற்றும் இந்திரா நகர் சாலை போன்ற பகுதிகளில் ஏதேனும் துக்ககாரியம் என்றால், பிரேதங்களை தொழிற்பேட்டையின் பிரதான சாலை வழியே எடுத்து சென்று, வடக்குப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டைக்கு இடையே உள்ள மயானத்தில் புதைக்கின்றனர். இதனால் நீர்நிலை மாசுபடுகின்றது. ஆகவே சிட்கோ வளாகத்தில் உள்ள மயானத்தை தொழில்பேட்டைக்கு வெளியே வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று மாவட்ட குறு,சிறு தொழில்கள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இரவு நேரங்களில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தொழிற்பேட்டை வளாகத்தை திறந்தவெளி மதுக்கூடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இவற்றை தடுக்க சிட்கோ தொழில்பேட்டை பிரதான வாயில் கிரில் கதவை மீண்டும் பொருத்தி தந்து, வெளிஆட்கள் பிரவேசிப்பதை கட்டுப்படுத்திட இரவு காவலாளியை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிட்கோ உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சிட்கோ மேலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எளம்பலூரில் சிட்கோ தொழில்பேட்டை வளாகத்திற்கு மேற்கு பகுதியில் மலை அடிவாரத்தில் மலைப்புறம்போக்கு மற்றும் மந்தை புறம்போக்கு நிலங்கள் அமைந்துள்ளதால், இப்பகுதியில் சிட்கோ- 2 வது தொழில்பேட்டையை அமைக்கவேண்டும் என்று சிட்கோ தொழில் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

Next Story