கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 5:53 PM GMT)

கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

டி.என்.பாளையம்,

கோபி அருகே கொங்கர்பாளையம் கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் அமைந்து உள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 42 அடி ஆகும். அணையின் இடது மற்றும் வலது கரையின் மூலம் 2 ஆயிரத்து 498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

நேற்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 28 அடியாக இருந்தது. இந்த நிலையில் குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கேரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா சுந்தர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அணையின் இடது கரை வாய்க்காலில், வினாடிக்கு 15 கன அடி தண்ணீரும், வலது கரை வாய்க்காலில் வினாடிக்கு 7 கன அடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 22 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தண்ணீரானது 10 நாட்களுக்கு திறந்துவிடப்படும். இந்த தண்ணீர் மூலம் கொங்கர்பாளையம், வினோபா நகர், அரக்கன்கோட்டை, வாணிப்புத்தூர், புஞ்சைதுறையம்பாளையளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பாசனம் பெறும்,’ என்றனர்.

Next Story