சத்தி அருகே உள்ள சமத்துவபுரத்துக்கு பவானி ஆற்று குடிநீர் வழங்கவேண்டும்; ஒன்றிய ஆணையாளரிடம், பொதுமக்கள் கோரிக்கை


சத்தி அருகே உள்ள சமத்துவபுரத்துக்கு பவானி ஆற்று குடிநீர் வழங்கவேண்டும்; ஒன்றிய ஆணையாளரிடம், பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 7:04 PM GMT)

சத்தியமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்துக்கு பவானி ஆற்று குடிநீர் வழங்க வேண்டும் என ஒன்றிய ஆணையாளரிடம், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம்- பண்ணாரி ரோட்டில் சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சமத்துவபுரம் உள்ளது. இங்குள்ளவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் சமத்துவபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று பகல் 11 மணி அளவில் சத்தியமங்கலம் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் இருந்த ஆணையாளர் மைதிலி, மேலாளர் மணிவண்ணன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘எங்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆழ்குழாய் கிணறு குடிநீர் மாசுபட்டு உள்ளது. எனவே எங்களுக்கு பவானி ஆற்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

இதற்கு பதில் அளித்து ஒன்றிய ஆணையாளர் மைதிலி கூறுகையில், ‘தற்காலிகமாக சமத்துவபுரத்தை அடுத்த வேடன் நகரில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று பவானி ஆற்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story