மீஞ்சூர் அருகே பித்தளை வால்வுகள் திருட்டு; 3 பேர் கைது


மீஞ்சூர் அருகே பித்தளை வால்வுகள் திருட்டு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2019 10:15 PM GMT (Updated: 13 Aug 2019 7:27 PM GMT)

மீஞ்சூர் அருகே பித்தளை வால்வுகளை திருடியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் ஒன்றியத்தில் மெதூர், வஞ்சிவாக்கம், பெரியகரும்பூர், பணப்பாக்கம், கொண்டகரை, வெள்ளிவாயல்சாவடி, கம்மவார்பாளையம், அத்தமணஞ்சேரி ரெட்டிபாளையம் காணியம்பாக்கம் போன்ற கிராம ஊராட்சி மக்களுக்கு ஆரணி ஆறு பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஊராட்சிகளில் மின்மோட்டார் பகுதியில் உள்ள குழாய் இணைப்புகளை உடைத்து பித்தளை வால்வுகள் திருடப்பட்டு வந்தது. இதனால் கிராம மக்கள் குடிநீரின்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பித்தளை வால்வுகள் திருடப்பட்டிருப்பதாக ஊராட்சி செயலாளர்கள் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்தனர். இந்தநிலையில் நேற்று கம்மவார்பாளையம், ஆலாடு, காணியம்பாக்கம் ஊராட்சிகளில் ஆழ்துளை கிணறுகளுக்கான குழாய்களை 3 பேர் உடைத்து விலை உயர்ந்த பித்தளை வால்வுகளை திருடுவதை கிராம மக்கள் பார்த்தனர்.

உடனடியாக அவர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் காரனோடை லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் (21), ரவிக்குமார் (20), அம்பேத்கர் தெருவை சேர்ந்த ராகேஷ் (19) என்பது தெரியவந்தது. அவர்கள் 20 பித்தளை வால்வுகளை திருடியது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து பொன்னேரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 17 பித்தளை வால்வுகள் அந்த பகுதியில் திருடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story