திருச்செந்தூரில் பள்ளிக்கூட மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து 4 மாணவர்கள் காயம்


திருச்செந்தூரில் பள்ளிக்கூட மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து 4 மாணவர்கள் காயம்
x
தினத்தந்தி 13 Aug 2019 9:45 PM GMT (Updated: 13 Aug 2019 7:29 PM GMT)

திருச்செந்தூரில் பள்ளிக்கூட மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து 4 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகரில் ஆர்.சி. தொடக்கப்பள்ளி கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் கட்டப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 180 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலையில் வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.

காலை 10.45 மணியளவில் மாடியில் உள்ள 3-ம் வகுப்பின் மேற்கூரை சிமெண்டு பூச்சு சுமார் 5 அடி நீள, அகலத்தில் திடீரென்று பெயர்ந்து விழுந்தது. அப்போது வகுப்பில் இருந்த மாணவர்கள் அக்சன் (வயது 8), ஜெயம் (8), ஆன்ட்ரூ (8), மாணவி மெர்சி ராணி (8) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.

உடனே ஆசிரியர்கள், காயம் அடைந்த மாணவர்களை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர், பள்ளிக்கூடத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த வகுப்பறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பிறகு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், “திருச்செந்தூர் அமலிநகரில் தனியார் நிர்வாகம் சார்பில் செயல்படும் பள்ளியில் கடந்த ஆண்டுதான் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. அதற்குள்ளாக பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து, 4 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். எனவே, அந்த பள்ளிக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டு உள்ளது. அந்த பள்ளியின் கட்டுமான தரத்தை பொதுப்பணித்துறை மற்றும் நகர பஞ்சாயத்து நிர்வாகத்தினர் ஆய்வு செய்வார்கள். இந்த ஆய்வின்போது, விதிமீறல் இருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

அப்போது திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story