காஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா? நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. தாக்கு
காஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா? என்று நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல்,
சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் குடகனாறு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் பழனி முருகன் கோவிலுக்கு எனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வந்தேன். கட்சி நிர்வாகிகள் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதையடுத்து திண்டுக்கல்லுக்கு வந்தேன். தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. பெரும்பான்மையுடன் இருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே பா.ஜ.க.வுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளித்து வருகிறது.
இதன் காரணமாக மோடி தற்போது இந்தியாவின் அதிபர் போல் செயல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நாடாளுமன்ற கமிட்டியில் விவாதம் நடத்தி ஒப்புதல் பெற்ற பின்னரே அந்த மசோதா நிறைவேற்றப்படும். ஆனால் தற்போது ஏதாவது மசோதா நிறைவேற உள்ளது என்றால் முந்தைய நாள் இரவு தான் எங்களுக்கு தெரியவருகிறது.
பின்னர் அடுத்த நாள் நாடாளுமன்றம் கூடும் போது அந்த மசோதா தொடர்பான விவாதம் நடத்த 4 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்படுகிறது. அதையடுத்து பா.ஜ.க. தனது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி எந்த எதிர்ப்பும் இல்லாமல் தாங்கள் கொண்டுவந்த மசோதாவை நிறைவேற்றி விடுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் தலைவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு இணையான அதிகாரத்தை பெற்றவராக இருந்தார்.
ஆனால் தற்போது அவர் அரசு ஊழியர் போல் செயல்படுகிறார். அந்த அளவுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு, தனிநபர் மற்றும் மாநில அரசுகளின் உரிமைகளை பறித்துள்ளது என்றே சொல்லலாம். மத்தியில் ஆட்சி செய்பவர்கள் நினைத்தால் ஒரு தனிநபரை கூட தீவிரவாதியாக சித்தரிக்க முடியும். பின்னர் அவர் கோர்ட்டு மூலம் தான் தீவிரவாதி இல்லை என நிரூபிக்கும் அவல நிலை உள்ளது.
குஜராத், உத்தரபிரதேச மாநிலங்களை விட கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் காஷ்மீர் வளர்ச்சியடைந்து தனி மாநிலமாக உள்ளது. ஆனால் தற்போதைய மத்திய அரசு, அதற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளது. 500 அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இது மத்திய அரசின் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது. மேலும் காஷ்மீரில் தற்போது என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அங்குள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினார்களா? என்று கூட நம்மால் அறிந்துகொள்ள முடியாது.
அந்த அளவுக்கு அடக்குமுறை கையாளப்பட்டு வருகிறது. மத்திய மந்திரியாக இருந்து ப.சிதம்பரம் என்ன திட்டத்தை கொண்டுவந்தார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த ப.சிதம்பரம், ஆசியாவிலேயே சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி என்ற பெருமையை பெற்றவர். அவர் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரம்தாழ்ந்து பேசியது ஒருநாள் அவருடைய மனதை உறுத்தும்.
காஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜூனன் போல் செயல்படுகின்றனர் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் புராணங்களை படித்து அப்படி கூறியிருக்கலாம். காஷ்மீர் மற்றும் ஜெர்மனியின் சரித்திரத்தை தெரிந்துகொண்டு இனிமேல் காஷ்மீர் விஷயம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டும். அவருடைய கருத்து வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்தின் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது ஒரு சரித்திர விபத்து ஆகும். எனவே அது மக்களுக்கான அரசாக செயல்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பழனி முருகன் கோவிலுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. சாமி தரிசனம் செய்ய சென்றார். அவர் முடிக் காணிக்கை செலுத்தி, சாமி தரிசனம் செய்தார். பின்னர் அடிவாரத்துக்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறுகையில், பழனி முருகன் கோவில் சிலை மோசடி குறித்து அறநிலையத்துறை செயலாளர் இதுவரையில் நடந்த விவரங்கள் என்னென்ன என்பது குறித்து அறிக்கையும் வெளியிட வேண்டும். மேலும் பழனி முருகன் கோவிலின் அறங்காவல் குழுவில் நான் இருந்தேன் என்னும் வகையில், இங்கு சிலை வைப்பது தொடர்பாக நடந்த சம்பவங் கள் பல்வேறு சந்தேகங் களை ஏற்படுத்துகிறது. எனவே அதை மக்களுக்கும் தெளிவுப் படுத்த வேண்டும். வேலூர் இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் விரை வில் உள்ளாச்சி தேர்தல் நடைபெற வேண்டும். கடந்த முறை நடந்த பல தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற தோல்வி, வாக்குகள் பெரும் சவா லானது. எனவே தற்போது கட்சியின் வளர்ச்சி கருதி சோனியாகாந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றார்.
Related Tags :
Next Story