காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை தண்ணீர் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 2½ லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென 100 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் நீர்வரத்து சீராக இருந்ததால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்டு 13-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று காலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிட்டார். பின்னர், அவர் காவிரி தண்ணீரை வரவேற்கும் விதமாக பூக்களை தண்ணீர் மீது தூவினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், சரோஜா, கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் பூக்களை தூவினர். ஏற்கனவே குடிநீர் தேவைக்காக ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வரும்நிலையில், நேற்று 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மேட்டூர் அணை அருகில் மேடை அமைத்து விழா நடைபெற்றது. பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசகம் வரவேற்றார். விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இறைவனுடைய அருளால் தற்போது (காலை நிலவரப்படி) மேட்டூர் அணை 101 அடியை எட்டியுள்ளது. அணையில் 66 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருக்கிறது. மேலும் வினாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
நமது விவசாயிகளுக்கு தேவையான நீர் முழுவதும் இந்த ஆண்டு வழங்கப்படும். மேட்டூர் அணைக்கு வருகிற நீரை பொறுத்து படிப்படியாக விவசாயிகளுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும். இதனால் சுமார் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் வசதி பெறுகிறது.
இன்றைக்கு தேவைப்படும் மொத்த நீரின் அளவு சுமார் 339 டி.எம்.சி. ஆகும். மேட்டூர் அணையிலிருந்து 220 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் மீதமுள்ள 119 டி.எம்.சி. தண்ணீர் வடகிழக்கு பருவமழை மூலமும் உறுதி செய்யப்படும். மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய்களுக்கு இன்று (நேற்று) முதல் 132 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும்.
மேலும் நீர் மின்நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையங்கள் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கின்றது. மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள 7 கதவணை நீர்மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
காவிரி டெல்டா மற்றும் மேட்டூர் கால்வாய் பாசன பகுதி விவசாய மக்கள் அனைவரும் நீரை பங்கீட்டு, நிலைமைக்கேற்ப தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைக்குமாறும், மிக அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டுமென்றும் விவசாய மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகக்கூடாது என்பதற்காக ஓடையின் குறுக்கே, நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுகின்றது. இதற்காக அரசால் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.600 கோடி செலவழிக்க திட்டம் தீட்டப்பட்டு செயலாக்கத்திற்கு வந்திருக்கின்றன. மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் வரை 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது.
2 தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்துவிட்டோம். மேலும் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசின் பரிசீலனையில் உள்ளது. அதற்குண்டான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கின்ற பணி நடைபெற்று வருகின்றது.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை அரசு நிறைவேற்றியே தீரும். அதை நிறைவேறும் பட்சத்தில், நமக்கு தேவையான நீர் கிடைக்கும். 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது. கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் கரூரில் இணைக்கப்படும். அதற்கு மேல் உள்ள பகுதிகள் அனைத்தும் நீரேற்று மூலமாக இரண்டு பகுதியில் இருக்கும் விவசாய மக்களுக்கு தேவையான நீரை கொடுப்பதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் வரும்போது ஈரோடு மாவட்டத்தில் பாசனம் வசதி பெறாத ஏரிகளுக்கும் மேட்டூர் உபரிநீரை தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்படும் என தெரிவித்து கொள்கிறேன். மேட்டூர் அணையிலிருந்து கரூர் வரையிலுள்ள ஏரிகள், குளங்கள் முழுவதும் உபரிநீர் நீரேற்றம் மூலமாக நிரப்பப்படும். இதற்காக ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே, ஒரு சொட்டுநீர் கூட வீணாகக்கூடாது என்ற அடிப்படையில் அரசால் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story