நாளை சுதந்திர தினவிழா, பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் - வாகன சோதனை தீவிரம்


நாளை சுதந்திர தினவிழா, பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் - வாகன சோதனை தீவிரம்
x
தினத்தந்தி 14 Aug 2019 4:15 AM IST (Updated: 14 Aug 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திரதின விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கோவை,

சுதந்திர தின விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டா டப்படுகிறது. இதையொட்டி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடக்கும் விழாவில், கலெக்டர் ராஜாமணி தேசியகொடி ஏற்றுகிறார்.சுதந்திர தின விழா நடைபெறும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மைதானத்தை சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல கோவை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் கூடும் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், சாய்பாபாகாலனி ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிலையங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் ஸ்கேனர் மற்றும் மெட்டர் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் ரெயில் நிலைய நடைமேடை, உள்பட பல்வேறு பகுதிகளிலும் மோப்ப நாய்களை கொண்டு ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். ரெயில் தண்டவாளங்களில் இன்று முதல் 2 நாட்களுக்கு ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

கோவை விமான நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இதே போல கோவையில் பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

லாட்ஜ்களில் சந்தேகப்படும் வகையில் யாராவது தங்கி யிருக்கிறார்களா? என்று போலீசார் இன்று (புதன்கிழமை) இரவு முதல் சோதனை நடத்த உள்ளனர். இதில் கோவை மாநகர போலீசார், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் உள்பட 1,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல கோவை புறநகரில் பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story