அறந்தாங்கியில் நூலகமாக மாற்ற முயன்ற அரசு பள்ளியை செயல்பட வைத்த கிராமமக்கள்


அறந்தாங்கியில் நூலகமாக மாற்ற முயன்ற அரசு பள்ளியை செயல்பட வைத்த கிராமமக்கள்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 8:02 PM GMT)

அறந்தாங்கியில் நூலகமாக மாற்ற முயன்ற அரசு பள்ளியை கிராமமக்கள் செயல்பட வைத்தனர்.

அறந்தாங்கி,

அறந்தாங்கி அருகே குளத்தூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், இந்த கல்வி ஆண்டில் படிக்க ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்து இருந்ததால், அந்த பள்ளியை நூலகமாக மாற்றம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளதாக கடந்த 9-ந் தேதி கல்வி அதிகாரிகள் கிராம மக்களிடம் கூறி உள்ளனர். இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் வசந்தி என்பவர் கிராம சபை கூட்டத்தில் குளத்தூர் தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே இருப்பதால், இந்த பள்ளி நூலகமாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால் கிராமத்தில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று முன்னதாகவே கூறினார். இதற்கு முயற்சி செய்வதாக கிராம மக்கள் கூறினர்.

மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள்

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி கல்வி அதிகாரிகள் தெரிவித்தப்படி, பள்ளியை நூலகமாக மாற்றம் செய்ய நேற்று நூலகர்கள் பள்ளியை திறக்க வந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் எங்கள் ஊரில் நீண்ட காலமாக இந்த பள்ளி உள்ளது. இந்த பள்ளியை மூடி நூலகமாக மாற்ற விடமாட்டோம் என்று கூறி, கிராமத்தில் இருந்து தனியார் பள்ளியில் படிக்கும் 11 மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் அழைத்து கொண்டு பள்ளிக்கு வந்தனர். பின்னர் 11 மாணவர்களையும் பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள், சேர்க்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு மாவட்ட கல்வி அதிகாரி திராவிடச்செல்வம் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

பள்ளி செயல்பட தொடங்கியது

இதையடுத்து அவர் சென்னையில் உள்ள கல்வி முதன்மை அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், அரசின் உத்தரவு படி பள்ளியை மூடிவிட்டு நூலகமாக மாற்றம் செய்யப்படும் என கடந்த 9-ந் தேதி தெரிவித்தோம். ஆனால் தற்போது 11 மாணவ-மாணவிகளுடன் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து உள்ளனர். மீண்டும் பள்ளி செயல்பட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் என்ற தகவலை தெரிவித்தார். அதற்கு கல்வி அதிகாரிகள் பள்ளியை மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது. பள்ளியில் குறைந்த சேர்க்கை இருந்ததால் மட்டுமே நூலகமாக மாற்றப்படும். தற்போது இந்த பள்ளியில் கூடுதலாக மாணவர்கள் இருப்பதால் மாணவர்களின் நலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் மீண்டும் பள்ளி செயல்பட ஏற்பாடு செய்யுங்கள் என்று சென்னையிலிருந்து உத்தர விட்டார்.

இதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி முன்னிலையில் பள்ளி நேற்று முதல் செயல்பட தொடங்கியது. கடந்த 9-ந் தேதி மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக காரணம் காட்டி மூடப்பட்ட பள்ளி நேற்று பெற்றோர்கள் 11 மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்ததால் பள்ளி மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்த சம்பவத்தால் குளத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story