தூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை: மானிய டீசல் வழங்க கோரிக்கை


தூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை: மானிய டீசல் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2019 9:30 PM GMT (Updated: 13 Aug 2019 8:06 PM GMT)

மானிய டீசல் வழங்க கோரி தூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டு உள்ளது. இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் அமைந்து உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளுக்கு அரசு மானிய விலையில் டீசல் வழங்கி வருகிறது. இதில் திரேஸ்புரம் மீனவர்கள் சிலருக்கு கடந்த சில மாதங்களாக மானிய டீசல் வழங்கவில்லை என்று புகார் எழுந்து உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக சங்குகுளி மீனவர்கள் சங்க தலைவர் முகமது மைதீன் தலைமையில் மீனவர்கள் மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து முகமது மைதீன் கூறும்போது, திரேஸ்புரம் பகுதியில் 1,300-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு மானிய முறையில் டீசல் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 940 பேருக்கு மட்டும்தான் மானிய டீசல் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே மீன்வளத்துறை இணை இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக மானிய டீசல் கிடைக்கப்பெறாத மீனவர்களுக்கு மானிய டீசல் வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கடலுக்கு சென்று தொழில் செய்ய முடியும் என்றார். 

Next Story