கந்தர்வகோட்டையில் குடிசைகள் தீயில் எரிந்து நாசம்; தம்பதி படுகாயம்


கந்தர்வகோட்டையில் குடிசைகள் தீயில் எரிந்து நாசம்; தம்பதி படுகாயம்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:15 PM GMT (Updated: 13 Aug 2019 8:14 PM GMT)

கந்தர்வகோட்டையில் 2 குடிசைகள் தீவிபத்தில் எரிந்து நாசமானது. மகனுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் குடிசைகள் எரிந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை செட்டிச்சத்திர தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி (50). இவர்கள் இருவரும் குடிசையில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் பார்த்தீபன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் சமைப்பதற்கு கியாஸ் அடுப்பை சாவித்திரி பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென கியாஸ் அடுப்பில் பிடித்த தீயானது, குடிசையிலும் பிடித்து, அருகில் நின்று கொண்டிருந்த சாவித்திரி சேலையில் பிடித்தது.

இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் தனது மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவரது உடம்பிலும் தீ பரவியது. இதை யடுத்து 2 பேரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ராஜேந்திரன் அருகே உள்ள கண்ணன் என்பவரது குடிசையும் தீப்பிடித்து எரிந்தது.

பொருட்கள் எரிந்து நாசம்

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ராஜேந்திரன் மகன் பார்த்தீபன் (25) என்பவருக்கு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அந்த திருமணத்திற்காக புதிதாக அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்கள், மோட்டார் சைக்கிள், கட்டில், பீரோ, கிரைண்டர் உள்ளிட்ட பொருட் கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. மேலும் கண்ணன் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது.

தீவிர சிகிச்சை

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை வருவாய் அதிகாரி லதா, தாசில்தார் கலைமணி, கோவிலூர் கிராம நிர்வாக அதிகாரி வீரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கர் விசாரணை நடத்தி வருகிறார். அடுத்த மாதம் மகனுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் தீவிபத்தில் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணவன்- மனைவி இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story