மதுகுடிக்க பணம் கேட்டதில் தகராறு: வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை


மதுகுடிக்க பணம் கேட்டதில் தகராறு: வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 8:19 PM GMT)

மதுகுடிக்க பணம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் குளித்தலை கோர்ட்டு 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

குளித்தலை,

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள புனவாசிப்பட்டி நரசிங்கபுரம் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளர்களான சண்முகம் (வயது 26), மணிகண்டன் (30) ஆகிய இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு லாலாபேட்டையில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது அருந்தினர். அப்போது அங்கு வந்த நரசிங்கபுரம் காலனியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவரிடம் அவர்கள் இருவரும் மதுஅருந்த பணம் கேட்டனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் சண்முகமும், மணிகண்டனும், சுரேசின் வீட்டிற்கு சென்று அவரிடம் மீண்டும் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். அதனை தடுக்க வந்த மேலும் 3 பேரையும் அவர்கள் தாக்கி காயப்படுத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேருக்கு சிறை தண்டனை

இந்த வழக்கு குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை நிறைவு பெற்று நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பை வாசித்தார். அதன்படி, 3 பேரை காயப்படுத்திய குற்றத்திற்காக தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை வீதம் மொத்தம் 6 ஆண்டுகளும், ரூ.6 ஆயிரம் அபராதமும் சண்முகத்துக்கு விதிக்கப்பட்டது.

கொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக சண்முகம், மணிகண்டனுக்கு முறையே 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அதன்படி சண்முகம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், மணிகண்டன் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும். இதையடுத்து சண்முகம், மணிகண்டன் ஆகிய இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story