அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு


அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 8:27 PM GMT)

கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 13-ந் தேதி (நேற்று) தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது என, கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக் கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் புலியூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விவசாயிகள் போராட்டம் காரணமாக நேற்று கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் ராமசாமி, செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் விவசாயிகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

அலுவலகத்தில் கலெக்டர் இல்லாததை அறிந்ததும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் ஆயத்தமானார்கள். அவர்களிடம் தாந்தோன்றிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சத்தியபிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் தற்போது இல்லாததால், அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்து செல்லுங்கள்.

தற்போது திருப்பூர் அமராவதி அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விரைவில் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என விவசாயிகளிடம் போலீசார் தெரிவித்தனர். அதற்கு, இன்று செவ்வாய்க் கிழமை(அதாவது நேற்று) தண்ணீர் திறப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், தண்ணீர் வராததால் ஏமாற்றமடைந்து இங்கு வந்திருக்கிறோம் என கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

பின்னர், கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்ற விவசாய சங்கத்தினர், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து நாளைக்குள் (அதாவது இன்று) கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லையென்றால் வருகிற 16-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்.

பின்னர் வெளியே வந்த நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், அமராவதி ஆற்றில் பல மாதங்களாக தண்ணீர் திறக்கப்படாததால் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீருக்காக பல்வேறு சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

வஞ்சிக்கப்பட்ட மாவட்டமா?

திருப்பூர் அமராவதி அணையின் நீர்மட்டம் 77 அடி வரை உயர்ந்து விட்டது. அங்குள்ள புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்துக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்படாதது ஏன்?, அப்படியென்றால் கரூர் வஞ்சிக்கப்பட்ட மாவட்டமா?. தண்ணீர் இல்லாததால் 50 ஆயிரம் விவசாய குடும்பங்கள் கரூரை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி நாளை(அதாவது இன்று) கரூர் கடைமடை பகுதி வரை தண்ணீர் திறக்கப்படாவிட்டால், அறிவித்தபடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Next Story