நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது


நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது
x
தினத்தந்தி 13 Aug 2019 10:00 PM GMT (Updated: 13 Aug 2019 8:53 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது.

நெல்லை, 

கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் தென் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக சாரால் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்வதால் கடனாநதி, ராமநதி, அடவிநயினார், பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன. கொடுமுடியாறும், குண்டாறும் நிரம்பி மறுகால் தண்ணீர் மறுகால் பாய்கிறது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று 2 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. நேற்று காலை வினாடிக்கு 1889 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 97.30 அடியில் இருந்தது நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 100.10 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 154 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் சேர்வலாறு அணை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 129.53 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 60 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 65.20 அடியாகவும், ராமநதியின் நீர்மட்டம் 73.50 அடியாகவும், கருப்பாநதி 69.72 அடியாகவும், அடவிநயினார் 116 அடியாகவும் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மலைப்பகுதி காலையில் லேசான சாரால் மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

குண்டாறு-18, சேர்வாலாறு-5, கடனாநதி-3, ராமநதி-3, அடவிநயினார்-2 பாபநாசம் -2,

இதில் நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணை பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Next Story