சடையநேரி கால்வாயில் தடுப்பணை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


சடையநேரி கால்வாயில் தடுப்பணை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:00 PM GMT (Updated: 13 Aug 2019 8:53 PM GMT)

சடையநேரி கால்வாயில் தடுப்பணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெஞ்ஞானபுரம், 

தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையின் மேலக்கால் மூலம் சடையநேரி, புத்தன்தருவை உள்ளிட்ட குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் சடையநேரி கால்வாயானது மெஞ்ஞானபுரம் அருகே ராமசுப்பிரமணியபுரத்தில் இரண்டாக பிரிந்து, ஒரு கால்வாய் சடையநேரி குளத்துக்கும், மற்றொரு கால்வாய் புத்தன்தருவை குளத்துக்கும் செல்கிறது.

சடையநேரி குளத்துக்கு 2 ஷட்டர்கள் மூலமும், புத்தன்தருவை குளத்துக்கு 4 ஷட்டர்கள் மூலமும் தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புத்தன்தருவை குளத்துக்கு கூடுதலாக தண்ணீர் செல்லும் வகையில், ராமசுப்பிரமணியபுரத்தில் சடையநேரி கால்வாயின் குறுக்கே ரூ.20 லட்சம் செலவில் தடுப்பணை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான பூமி பூஜையை திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா நேற்று காலையில் தொடங்கி வைத்தார். இந்த தடுப்பணை கட்டப்பட்டால், சடையநேரி குளத்துக்கு குறைந்தளவே தண்ணீர் செல்லும் என்று கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தடுப்பணை அமைக்கும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. செல்லத்துரை, முன்னாள் யூனியன் தலைவர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் தடுப்பணை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

Next Story