தமிழக அரசு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் - சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்


தமிழக அரசு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் - சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:30 PM GMT (Updated: 13 Aug 2019 9:25 PM GMT)

தமிழக அரச அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பேரவை கூட்டம் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டதலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் மகேஸ்வரி வரவேற்றார். மாநிலசெயற்குழு உறுப்பினர் லூசாமேரி, மாவட்ட செயலாளர் காவேரி, மாவட்ட பொருளாளர் ராஜா, மாவட்ட துணைத்தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிஐடியு மாவட்டசெயலாளர் நாகராசன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை, மாநில செயலாளர் கே.சக்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டதலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலதலைவர் சிவப்பிரகாசம் உள்பட பல்வேறு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

சத்துணவு மையங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் ஓய்வுபெறும் போது குடும்ப பாதுகாப்புக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் பணி ஓய்வுபெறும்போது அரசு பணிக்கொடையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பணிகாலத்தில் இறக்கும் சத்துணவு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு நிபந்தனையின்றி கல்வித்தகுதிக்கேற்ப அரசு பணி வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்களின் இடமாறுதலை வெளிப்படையாக நடத்தி மாறுதல் ஆணை வழங்கவேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்கவேண்டும். அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல் 9 மாத சம்பளத்துடன் மகப்பேறு விடுமுறையை சத்துணவு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் பணிபுரியும் ஊழியரின் வேலையை பறிக்ககூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் சத்துணவு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாவட்ட துணைத்தலைவர் பாபு நன்றிகூறினார்.

Next Story