அர்ச்சுனனையும் கிருஷ்ணனையும் ரஜினிகாந்த் கேவலப்படுத்தி விட்டார் - மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி


அர்ச்சுனனையும் கிருஷ்ணனையும் ரஜினிகாந்த் கேவலப்படுத்தி விட்டார் - மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 14 Aug 2019 5:15 AM IST (Updated: 14 Aug 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

அர்ச்சுனனையும் கிருஷ்ணனையும் ரஜினிகாந்த் கேவலப்படுத்தி விட்டார் என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

சிவகாசி,

விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈஞ்சார், நடுவப்பட்டி, கிருஷ்ணபேரி, சாமிநத்தம், தேவர்குளம் ஆகிய பகுதிகளுக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரிடம் தங்கள் பகுதியில் அடிப்படை வசதி செய்து கொடுக்க கோரி மனு கொடுத்தனர். சாமிநத்தம் பஞ்சாயத்து பகுதியில் ஆய்வு பணி மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் திருமண மண்டபமும், தண்ணீர் தொட்டியும், மின் விளக்கு வசதியும், தற்போது மேலூரில் உள்ள ரேசன்கடையை பிரித்து கீழுரில் தொடங்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாணிக்கம்தாகூர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக உறுதி அளித்தார்.

பின்னர் அந்த பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்த பணிகளை ஆய்வு செய்தார். பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பகுதியில் உள்ள மக்கள் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி மீண்டும், மீண்டும் வலியுறுத்தி மனு கொடுத்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் அதிக அளவில் செய்யப்பட்டது. இதனால் கிராம பெண்கள் வேலை பெற்றனர். ஆனால் தற்போது பணியின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உரிய வேலை இல்லாமலும், சம்பளம் கிடைக்காமலும் பெண்கள்அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலைகள் வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். நான் தொடர்ந்து அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து 100 நாள் வேலை உறுதி திட்டம் குறித்து ஒரு அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் அனுப்ப உள்ளேன்.

மோடியும், அமித்ஷாவும் அர்ச்சுனன், கிருஷ்ணன் போல் இருக்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது தவறான கருத்து. அர்ச்சுனனையும், கிருஷ்ணனையும் அவர் கேவலப்படுத்துகிறார் என்று அர்த்தம். துரியோதனன், துச்சாதனன் என்று சொல்லி இருந்தால் சரியாக இருந்து இருக்கும். அல்லது ராஜபக்சே, கோத்தபையராஜபக்சே என்று சொல்லி இருந்தால் சரியாக இருந்து இருக்கும். மோடியும், அமித்ஷாவின் கைகளில் ரத்தக்கறைகள் படிந்து இருக்கிறது.

சோதனையான காலகட்டங்களில் எல்லாம் சோனியாகாந்திதான் கட்சியை காப்பாற்றி உள்ளார். தற்போதும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜாசொக்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், விவேகன்ராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், மாணவர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சின்னதம்பி, வட்டார தலைவர்கள் சங்கர்ராஜ், பைபாஸ் வைரம், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர் மல்லீஸ்வரன், சாமிநத்தம் பஞ்சாயத்து செயலாளர் செந்தில்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story