மாவட்ட செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிக்கு ரூ.6,813 கோடி : மத்திய அரசிடம் மராட்டியம் கேட்கிறது + "||" + Rs.6,813 crore for flood relief work in districts affected by heavy rains

கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிக்கு ரூ.6,813 கோடி : மத்திய அரசிடம் மராட்டியம் கேட்கிறது

கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிக்கு ரூ.6,813 கோடி : மத்திய அரசிடம் மராட்டியம் கேட்கிறது
கோலாப்பூர், சாங்கிலி மாவட்டங்களில் மீட்பு பணி முடிந்து நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 813 கோடி நிவாரண நிதி வழங்கும்படி மத்திய அரசை மராட்டியம் கேட்டுக்கொண்டு உள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தி விட்டது.

தொடக்கத்தில் கொங்கன் மண்டலத்தில் உள்ள மும்பை, தானே, பால்கர், ராய்காட், சிந்துதுர்க், ரத்னகிரி மாவட்டங்களில் கனமழை பெய்தது.

பின்னர் மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களான கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, சோலாப்பூரை புரட்டி எடுத்தது. வரலாறு காணாத மழையால் 5 மேற்கு மாவட்டங்களும் பெரும் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. கோலாப்பூர் மற்றும் சாங்கிலி ஆகிய இரு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மேற்கண்ட 5 மாவட்டங்களிலும் மழைக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்து இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. வெள்ளத்தால் எண்ணற்ற அளவில் பொருட்சேதமும் ஏற்பட்டு உள்ளது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இருந்து மீட்கப்பட்ட 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் 414 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

1 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பயிர்கள் அனைத்தும் நாசமாகி விட்டன.

கனமழையால் இந்த மாவட்டங்களில் மின்மாற்றிகள், மின்சார வயர்கள் சேதம் அடைந்து உள்ளன. இதன் காரணமாக மின் வினியோகமும் முடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கோலாப்பூர், சாங்கிலி மாவட்டங்களில் மீட்பு பணி நேற்றுடன் முடிந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து கோலாப்பூர் மாவட்ட கலெக்டர் சஞ்சய் ஷிண்டே கூறியதாவது:-

கோலாப்பூர் மாவட்டத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒரு வாரத்திற்கு பிறகு மும்பை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மீட்பு பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, நிவாரண பணிகளில் தீவிரம் காட்டி உள்ளோம். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு வினியோகங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மின் வினியோகம் மற்றும் டெலிபோன் இணைப்புகளை சீர்செய்வதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவதற்கான பணியும் தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வெள்ள நிவாரண பணிகளுக்காக மாநில அரசு சார்பில் முதல் கட்டமாக ரூ.154 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மாநில மந்திரி சபை கூடியது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் வெள்ள நிவாரண பணிகளை செய்வதற்காக ரூ.6 ஆயிரத்து 813 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு வெள்ள நிவாரண தொகையை விடுவிக்கும் வரையில் மாநில அரசு சார்பில் அந்த பணத்தை செலவு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இதில், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள கோலாப்பூர், சாங்கிலி மற்றும் சத்தாரா மாவட்டங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 708 கோடியும், கொங்கன் மண்டலம், நாசிக் மற்றும் மாநிலத்தின் இதர மாவட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 105 கோடியும் நிதியுதவி வழங்க கோரப்பட்டு உள்ளது.

கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா மாவட்டங்களில் வெள்ள நிவாரணத்துக்கு ஒதுக்கப்படும் தொகையில் ரூ.300 கோடி மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், இதர உதவிகளுக்காகவும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.