திண்டிவனம் அருகே பரபரப்பு, வீடுகளில் ரகசிய குறியீடு கொள்ளையடிக்க திட்டமா? பொதுமக்கள் பீதி


திண்டிவனம் அருகே பரபரப்பு, வீடுகளில் ரகசிய குறியீடு கொள்ளையடிக்க திட்டமா? பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 11:02 PM GMT)

திண்டிவனம் அருகே வீடுகளில் ரகசிய குறியீடு வரையப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பதற்காக யாரும் சதித்திட்டம் தீட்டி உள்ளார்களா? என்று பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மானூர் ஊராட்சிக்கு உட்பட்டது கோபாலபுரம். இங்கு 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் 4, 5, 6-வது தெருக்களில் உள்ள வீடுகளுக்கு வந்த வடமாநிலத்தை சேர்ந்த சிலர் பழைய துணிகள் இருந்தால் கொடுங்கள் என்று, வீட்டில் இருந்தவர்களிடம் கேட்டுள்ளனர். பரிதாபப்பட்ட சிலர் பழைய துணிகளை அவர்களிடம் கொடுத்தனர். அதனை வாங்கிக் கொண்ட வடமாநிலத்தினர் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் வடமாநிலத்தினர் வந்து சென்ற 3 தெருக்களில் உள்ள சில வீடுகளின் சுவற்றில் கலர் பென்சிலால் எண்கள் மற்றும் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டிருந்தது.

இதை கண்ட அப்பகுதி மக்களுக்கு பழைய துணிகளை வாங்க வந்தவர்கள், வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்றும், ரகசிய குறியீடுகள் எழுதப்பட்ட வீடுகளில் நள்ளிரவு நேரத்தில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டி இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி திண்டிவனம், பிரம்மதேசம் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கோபாலபுரத்துக்கு விரைந்து வந்து வீடுகளின் சுவற்றில் வரையப்பட்டிருந்த எண்கள் மற்றும் குறியீடுகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீடுகளில் வரையப்பட்டிருந்த எண்கள் மற்றும் குறியீடுகளை அழித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீட்டின் அருகே 2 பேர் சுற்றித்திரிந்தனர். இதைபார்த்த நான் அவர்களை பின் தொடர்ந்தேன். ஆனால் அவர்கள் என்னை கண்டதும் ஓடி விட்டனர் என்றார்.

திட்டமிட்டு கொள்ளையடிக்கும் நோக்கில் 3 தெருக்களிலும் உள்ள வீடுகளில் குறியீடுகள் வரையப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் அப்பகுதி இளைஞர்கள் சிலர் உருட்டுக்கட்டைகளுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story