வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி சாலையோர வியாபாரிகள் ஊர்வலம்; போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி சாலையோர வியாபாரிகள் ஊர்வலம்; போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:30 PM GMT (Updated: 13 Aug 2019 11:12 PM GMT)

சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி வியாபாரிகள் ஊர்வலம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை கலெக்டர் உத்தரவின்பேரில் பொதுப் பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்தநிலையில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் 2014-ஐ புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக அவர்கள் இந்திராகாந்தி சிலை அருகே நேற்று திரண்டனர். அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றபோது அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. சுதந்திர தினம் காரணமாக போராட்டங்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர். அவர்களை கைது செய்யவும் முயற்சித்தனர்.

இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் அருகே சென்றபோது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் சங்க முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அருணை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

Next Story