மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு பாசமழை பொழிந்த தாய் ஆடு


மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு பாசமழை பொழிந்த தாய் ஆடு
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 5:23 PM GMT)

மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. அதனுடன் தாய் ஆடு பாசமழை பொழிந்தது காண்போரை நெகிழச்செய்தது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காரமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பொன்னர். இவர் ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே சுமார் 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றின் அருகே நேற்று காலை ஒரு குட்டி ஆடு தாயுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஆட்டுக்குட்டி கிணற்றில் தவறி விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் ஆடு, கிணற்றின் கரையில் நின்று தொடர்ந்து சத்தமிட்ட படியே இருந்தது.

உயிருடன் மீட்பு

இதனால் பதறி போன பொன்னர் அங்கு வந்து பார்த்தார். அப்போது, ஆட்டுக்குட்டி கிணற்றுக்குள் இருந்து சத்தமிட்டுக்கொண்டிருந்தது. உடனே அவர் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கினார்கள்.

பின்னர் ஆட்டுக்குட்டியை அவர்கள் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

அதை கீழே இறக்கிவிட்டதும் நேராக தனது தாயிடம் துள்ளிக்குதித்து ஓடியது. தாய் ஆடு தனது குட்டியை பார்த்ததும் மகிழ்ச்சியில் அதை நாக்கினால் வருடிக்கொடுத்து பாசமழை பொழிந்தது. இது காண்போரை நெகிழச்செய்தது.

Next Story