டி.என்.பாளையம் அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தைப்புலியை நேரில் பார்த்த விவசாயி; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை


டி.என்.பாளையம் அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தைப்புலியை நேரில் பார்த்த விவசாயி; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 5:23 PM GMT)

டி.என்.பாளையம் அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தைப்புலியை விவசாயி ஒருவர் நேரில் பார்த்தார். அதனால் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கொழிஞ்சி காடு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 49). விவசாயி. இவர் நேற்று காலை குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் உள்ள அவருடைய தோட்டத்துக்கு சென்றார். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று வேகமாக ஓடுவதை கண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி அக்கம் பக்கத்து விவசாயிகளிடம் கூறினார். இதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் மற்றும் டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். மேலும், அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர். இதில் அது சிறுத்தைப்புலியின் கால்தடம் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாகவே சிறுத்தைப்புலி ஒன்று கிராமப்பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதுவரை கோழி, நாய்களை கொன்று இழுத்துச்சென்று உள்ளது. தற்போது சிறுத்தைப்புலியை விவசாயி வின்சென்ட் நேரில் பார்த்து உள்ளார். இதனால் நாங்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளோம்.

எனவே ஊருக்குள் புகுந்து மனித உயிர்களை காவு வாங்குவதற்குள் அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும். மேலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்’ என்றனர்.

Next Story