மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் புதிதாக குடிமராமத்து திட்ட பணிகளை தொடங்க கூடாது பூண்டி கலைவாணன் பேட்டி


மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் புதிதாக குடிமராமத்து திட்ட பணிகளை தொடங்க கூடாது பூண்டி கலைவாணன் பேட்டி
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 6:44 PM GMT)

மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் புதிதாக குடிமராமத்து திட்ட பணிகளை தொடங்க கூடாது என பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி ஆடலரசன் ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் ஆனந்தை நேரில் சந்தித்து குடிமராமத்து திட்ட பணிகள் குறித்தும், சம்பா சாகுபடிக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடத்துவது குறித்தும் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்த டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு சம்பா சாகுபடியை செய்ய முடியுமா? என கவலையுடன் இருந்து வந்தனர். இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வருகிறது.

புதிதாக குடிமராமத்து பணிகளை தொடங்க கூடாது

இதனையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை நேற்று முன்தினம் திறந்து வைத்துள்ளார். இதில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்தது போல் நாடகமாடுகிறார். மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்னும் சில நாட்களில் திருவாரூர் மாவட்டத்திற்கு வந்து அடையும். எனவே தற்போது நடைபெற்று வரும் பணிகளை மட்டும் முடித்துவிட்டு இனி மேல் புதிதாக குடிமராமத்து திட்ட பணிகளை தொடங்க கூடாது. அப்பணிகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க வேண்டும். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை சேமிப்பதற்கான எந்த நடவடிக்கையும் தமிழக அரசு இதுவரை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story