தாராபுரம் அருகே தளவாய்பட்டிணத்தில் மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்


தாராபுரம் அருகே தளவாய்பட்டிணத்தில் மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 7:07 PM GMT)

தாராபுரம் அருகே தளவாய்ப்பட்டிணத்தில் மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம்,

தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணம் அரசு மேல் நிலைப்பள்ளியில், கடந்த 2016-17 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் பிளஸ்-2 படித்த மாணவ, மாணவிகளுக்கு இதுவரை அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கவில்லை என்று புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள், பள்ளிக்குச் சென்று தங்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா மடிக்கணினியை வழங்குமாறு கேட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு, இதுவரை கல்வித்துறை மடிக்கணினி வழங்கவில்லை என்றும், மடிக்கணினி வழங்கியதும் உடனே வழங்குவதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் மாணவர்கள் பள்ளியின் முன்பு சாலையில் அமர்ந்து, மடிக்கணினியை உடனே வழங்க வேண்டும் எனக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:- தளவாய்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 2 ஆண்டுகளில் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள், தற்போது கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி கற்று வருகிறார்கள். தற்போது அவர்களுக்கு மடிக்கணினி அவசியம் தேவைப்படுகிறது. பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் போது எங்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி முறையாக வழங்கவில்லை. பள்ளி படிப்பை முடித்து வெளியே செல்லும்போது, மடிக்கணினி வந்ததும் தகவல் கொடுக்கிறோம் வந்து பெற்றுச்செல்லுங்கள் என்று கூறினார்கள்.

இதுவரை பள்ளியிலிருந்து தகவல் எதுவும் வரவில்லை. அதே சமயம் இந்த ஆண்டு அதே அரசுப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு இன்னும் வழங்கவில்லை. அதனால் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கடந்த மாதம் 17-ந்தேதி பள்ளிக்குச் சென்று, அரசு வழங்கும் மடிக்கணினியை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டோம். அதற்கு ஆசிரியர்கள் கல்வித்துறையிடமிருந்து விரைவில் வந்துவிடும், வந்தவுடன் உடனே தெரியப்படுத்துகிறோம் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு ஒரு மாத காலம் ஆகிவிட்டது.

இதுவரை எந்த தகவலும் இல்லை. அதனால் மீண்டும் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து, பள்ளிக்குச் சென்று மடிக்கணினி வழங்குமாறு தலைமை ஆசிரியரிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் மீண்டும் அதே பதிலைதான் தெரிவிக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் எங்களுக்கு மடிக்கணினி மிகவும் தேவையாக உள்ளது. இந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் அனைவரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மடிக்கணினி வாங்கும் அளவிற்கு வசதியானவர்கள் இல்லை. எனவே அரசு எங்களின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக எங்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினி, வழங்க வேண்டும் என்று கேட்டு, சாலை மறியலில் ஈடுபட்டோம் என்று கூறினார்கள்.

தகவல் அறிந்த அலங்கியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் மடிக்கணினி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால், தாராபுரம்- உடுமலை சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story