தக்கலை அருகே மினிலாரி மோதி வாலிபர் பலி தாயின் கண்முன்னே நேர்ந்த சோகம்


தக்கலை அருகே மினிலாரி மோதி வாலிபர் பலி தாயின் கண்முன்னே நேர்ந்த சோகம்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 7:23 PM GMT)

தக்கலை அருகே மினிலாரி மோதி வாலிபர் பலியானார். தாயின் கண்முன்னே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே பறைக்கோடு பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் ஜெனிஸ் (வயது 22). இவர், தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தக்கலைக்கு சென்றார். அங்கு பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திருவனந்தபுரம்-நாகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளுக்கு முன்பு ஒரு மினி லாரி சென்றது. தன்னுடைய வீட்டின் அருகே வந்த போது, மினி லாரியை ஜெனிஸ் முந்தி சென்றதாக தெரிகிறது. அந்த சமயத்தில் திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதனால் மோட்டார் சைக்கிளுடன் அவர் கீழே விழுந்தார்.

பலி

இந்த நிலையில் பின்னால் வந்த மினி லாரி, ஜெனிஸ் மீது ஏறி இறங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அவர் உடல் நசுங்கி அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

வீட்டின் வாசலில் நின்ற ஜெனிஸின் தாயார், இந்த விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர், மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இந்த சம்பவம் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெனிஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாயின் கண்முன்னே மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மினிலாரி மோதி ஜெனிஸ் பலியான சம்பவம் அந்த பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதில் பதிவான காட்சியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story