நிலக்கோட்டை தினசரி சந்தையில், கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்


நிலக்கோட்டை தினசரி சந்தையில், கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:30 PM GMT (Updated: 14 Aug 2019 7:52 PM GMT)

நிலக்கோட்டை தினசரி சந்தையில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் வரிவசூல் செய்வதற்காக உரிமத்தை நிலக்கோட்டை சேர்ந்த மணி ராஜா என்பவர் ரூ.22 லட்சத்து 7 ஆயிரத்துக்கு எடுத்தார். அதனைத்தொடர்ந்து அவர் கடந்த ஒரு மாதமாக வரிவசூல் செய்து வருகிறார்.

இந்தநிலையில் வெளி மார்க்கெட்டில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறி மூட்டைகளுக்கு இதுநாள் வரை வரிவசூல் செய்யப்படவில்லை. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக இந்த காய்கறி மூட்டைகளுக்கு வரிவசூல் செய்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெளி மார்க்கெட்டில் வரி செலுத்தி தான் காய்கறி வாங்கி வருகிறோம் என்று வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படாததால் வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து தினசரி சந்தை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் திரும்பி சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன் தலைமையில் போலீசார் வந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக மீண்டும் நாளை தாசில்தார் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கருத்துக்கள் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் தற்காலிமாக போராட்டத்தை ஒத்தி வைத்து கடைகளை திறந்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 12 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story