திருப்பத்தூரில் தார்சாலை அமைக்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


திருப்பத்தூரில் தார்சாலை அமைக்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2019 4:15 AM IST (Updated: 15 Aug 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் தார்சாலை அமைக்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதற்காக சாலைகளில் குழி தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்ததும் நகராட்சி, நெடுஞ்சாலை துறையினர் தார்சாலை போட வேண்டும். ஆனால் இதுவரை பல பகுதிகளில் தார்சாலை போடவில்லை.

நெடுஞ்சாலை துறை சார்பில், சின்னகடை தெருவில் இருந்து தாலுகா போலீஸ் நிலையம் வரை தார்சாலை போடப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை தி.மு.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை மெயின் ரோடு சின்னகடை கூட்ரோடு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் திருலோகசந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் நாளை (இன்று) சாலை அமைக்கும் பணிகளை தொடங்குவதாக உறுதியளித்தனர். அதன்பேரில் எம்.எல்.ஏ. நல்லதம்பி மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தார்சாலை அமைக்காவிட்டால்...

இதுகுறித்து ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ‘பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பல சாலைகள் தோண்டப்பட்டு அப்படியே கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நெடுஞ்சாலை துறையினருக்கு ஏற்கனவே தார்சாலை அமைக்க தமிழக அரசால் பணம் கட்டப்பட்டுவிட்டது. இருந்தும் நெடுஞ்சாலை துறையினர் தார்சாலை அமைக்காமல் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாளை (இன்று) தார்சாலை அமைக்காவிட்டால் மீண்டும் இதே பகுதியில் போராட்டம் நடைபெறும்’ என்றார். 

Next Story