சென்னை விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் தங்கம் பறிமுதல்; 3 பேரிடம் விசாரணை


சென்னை விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் தங்கம் பறிமுதல்; 3 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 15 Aug 2019 3:45 AM IST (Updated: 15 Aug 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் சவுதி அரேபியா, மியான்மரில் இருந்து கடத்தி வந்த ரூ.17½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மியான்மரில் இருந்து தாய்லாந்து வழியாக விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த சூசை அலெக்சாண்டர்(வயது 67), ராபர்ட் டிங்கு (29) ஆகியோரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்களும், சிகரெட்டுகளும் இருந்தன. பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் இருவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

2 பேரிடம் இருந்தும் ரூ.8 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 210 கிராம் தங்கம், ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஐதராபாத்தை சேர்ந்த நசீர் பாஷா(56) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் எமர்ஜென்சி விளக்கு ஒன்று இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதை பிரித்து பார்த்தபோது, அதில் 2 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.9 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 494 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.17 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 704 கிராம் தங்கம், ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை யாருக்காக கடத்தி வந்தனர்? என பிடிபட்ட 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Next Story