மாவட்ட செய்திகள்

விருத்தாசலம் அருகே, விஷம் கலந்த டீ குடித்த 9 பேர் மயக்கம் - கொலை செய்ய திட்டமா? போலீசார் விசாரணை + "||" + Near Virudhachalam, Drinking poisonous tea 9 people fainted - Plans to kill?

விருத்தாசலம் அருகே, விஷம் கலந்த டீ குடித்த 9 பேர் மயக்கம் - கொலை செய்ய திட்டமா? போலீசார் விசாரணை

விருத்தாசலம் அருகே, விஷம் கலந்த டீ குடித்த 9 பேர் மயக்கம் - கொலை செய்ய திட்டமா? போலீசார் விசாரணை
விருத்தாசலம் அருகே விஷம் கலந்த டீ குடித்த 9 பேர் மயக்கமடைந்தனர். அவர்களை யாரேனும் கொலை செய்ய திட்டமிட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி.புத்தூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), தொழிலாளி. இவரது மனைவி அஞ்சுகம்(32). இவர் நேற்று காலை தனது வீட்டில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து, அந்த நீரை பாலில் கலந்து டீ போட்டுள்ளார். பின்னர் அந்த டீயை அஞ்சுகம், இவரது மகன்கள் ரெமோ(12), ரோமோ(9), ரோகித்(7), மகள் அஞ்சலி (6), உறவினர்கள் வீரசெல்வன், இவருடைய மகள் ஸ்ருதிகா, வேலு மனைவி சுகன்யா(32), மகள் வனிஷா(2) ஆகியோர் குடித்தனர். டீ குடித்த சில நிமிடங்களில் அஞ்சுகம் உள்ளிட்ட 9 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த விருத்தாசலம் தாசில்தார் கவியரசு தலைமையிலான வருவாய்த்துறையினர் டி.வி.புத்தூர் கிராமத்துக்கு சென்று ரமேஷின் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அஞ்சுகம் தண்ணீர் பிடித்ததாக கூறப்பட்ட குடிநீர் குழாயை சோதனை செய்த போது, அந்த குழாயின் மேற்பகுதியில் உள்ள மூடியை திறந்து யாரோ விஷத்தை கலந்து இருப்பது தெரியவந்தது. மேலும் அவருடைய வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கின் ஒயரும் துண்டிக்கப்பட்டு கிடந்தது.

இதனால் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்வதற்காக மர்மநபர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்று அதே பகுதியில் உள்ள வேறு வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாயிலும் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதுடன், பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.