விழுப்புரம் நகராட்சியில், ஒப்பந்தப்புள்ளி கோருவதில் அ.தி.மு.க. பிரமுகரின் ஆதரவாளர்கள் ரகளை - போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு
விழுப்புரம் நகராட்சியில் ஒப்பந்தப்புள்ளி கோருவதில் அ.தி.மு.க. பிரமுகரின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர். உடனே அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டு பகுதிகளில் பழுதடைந்த தெரு மின்விளக்கு, மின்சார பெட்டிகளை புதிதாக மாற்றவும், எல்.இ.டி. பல்புகள் பொறுத்தும் பணி, பராமரிப்பு பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.36 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதற்காக ஒப்பந்தம் கோருபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நகராட்சி ஆணையர் லட்சுமி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று காலை ஒப்பந்தம் கோர விண்ணப்பிப்பதற்கான பெட்டி, நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், தன்னுடைய விண்ணப்பத்தை அந்த பெட்டியில் செலுத்தினார். தொடர்ந்து, அவர் மற்ற ஒப்பந்ததாரர்கள் யாரையும் விண்ணப்பங்களை செலுத்தாத வகையில் தனது ஆதரவாளர்களை திரட்டி நகராட்சி அலுவலக நுழைவுவாயில் முன்பு தடுத்து நிறுத்தினார். அதுமட்டுமின்றி சிலர், அந்த பெட்டியின் மீது அமர்ந்தும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் இன்ஸ்பெக்டர் கனகேசன், சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அ.தி.மு.க. பிரமுகரின் ஆதரவாளர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களில் பிடிபட்ட 4 பேரை விசாரணைக் காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். தொடர்ந்து, வேறு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நகராட்சி அலுவலகத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story