சென்னையில் செல்போன் திருட்டு வழக்கில் நண்பருடன் கல்லூரி மாணவி கைது


சென்னையில் செல்போன் திருட்டு வழக்கில் நண்பருடன் கல்லூரி மாணவி கைது
x
தினத்தந்தி 15 Aug 2019 12:15 AM GMT (Updated: 14 Aug 2019 10:00 PM GMT)

செல்போன் திருட்டு வழக்கில் சென்னையில் கல்லூரி மாணவி, அவரது நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை வன்னிய தேனாம்பேட்டையை சேர்ந்தவர் பிரசன்னா லிப்சா (வயது 32). இவர் சென்னை நுங்கம்பாக் கத்தில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த 12-ந் தேதி அன்று இரவு 7 மணி அளவில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரோகிணி என்பவருடன் தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் பிரசன்னா லிப்சா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றுவிட்டார். மோட்டார் சைக்கிளின் பின்னால் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரசன்னா லிப்சா தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மேற்பார்வையில், தேனாம்பேட்டை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு பொன்னுவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

செல்போன் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அதை அடிப்படையாக வைத்து மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறித்த வாலிபரையும், மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து சென்ற இளம்பெண்ணையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

செல்போனை பறித்துச் சென்ற வாலிபரின் பெயர் ராஜூ (29) சூளைமேட்டை சேர்ந்தவர். இவர் கையில் பச்சை குத்தும் தொழில் செய்கிறார். பின்னால் உட்கார்ந்து இருந்த இளம்பெண்ணின் பெயர் சுவாதி (20). கரூரை சேர்ந்த இவர், சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

ராஜூவும், சுவாதியும் நண்பர்களாக பழகி வந்தனர். சுவாதி கல்லூரிக்கு ஒழுங்காக செல்லவில்லை என்று கூறப்படுகிறது. ராஜூ மீது ஏற்கனவே மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கு வடபழனி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளும், 2 செல்போன்களும் மீட்கப்பட்டது. மோட்டார் சைக்கிளை வேளச்சேரி பகுதியில் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Next Story