செல்போனை பயன்படுத்தினால் கவனம் திசை திரும்பி விடும் - மாணவர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்


செல்போனை பயன்படுத்தினால் கவனம் திசை திரும்பி விடும் - மாணவர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 10:40 PM GMT)

செல்போன் பயன்படுத்துவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் கவனம் திசை திரும்பி விடும் என்று மாணவர் களுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

பாகூர்,

புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான போக்சோ சட்ட விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வேலம்மாள் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் பூங்குழலி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:-

மாணவிகள் தங்களது பிரச்சினை எதுவானாலும் உடனடியாக பெற்றோர், ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். அந்த பிரச்சினை பெரிதாகும் முன்பே சட்டப்படி அதற்கு தீர்வு காணப்படும். அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள், உறவினர்கள் மூலமாக ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தான் அதிகளவில் நீதிமன்றத்திற்கு வருகிறது.

வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை நினைவில் கொண்டு குற்றம் சிறிய அளவில் இருக்கும் போது அதற்கு தீர்வு காணப்பட வேண்டும். மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால், படிப்பின் மீதுள்ள கவனம் திசை திரும்பி வேறு பாதையில் கொண்டுபோய் சேர்த்து விடும். எனவே படிப்பில் கவனத்தை செலுத்துங்கள். அப்போது தான் நீங்கள் நினைத்ததை அடைய முடியும்.

பாலியல் குற்றங்கள் குறித்து தெரிவிக்கப்படும் புகார்கள் ரகசியமாக வைக்கப்படும். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்திட புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணையம் எப்போதும் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினர்.

தொடர்ந்து, மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுரேஷ்குமார், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன், முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மும்தாஜ், வக்கீல் ராஜகோபால் ஆகியோர் விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.

Next Story