முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடந்தது; மைசூரு தசரா விழா ஆலோசனை கூட்டம்


முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடந்தது; மைசூரு தசரா விழா ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2019 12:00 AM GMT (Updated: 14 Aug 2019 10:48 PM GMT)

மைசூரு தசரா விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்- மந்திரி எடியூரப்பா தலைமையில் நேற்று நடைபெற்றது.

பெங்களூரு, 

தசரா விழாவை தொடங்கி வைக்க எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாக கூட்டத்திற்கு பின் எடியூரப்பா தெரிவித்தார்.

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான தசரா விழா வருகிற செப்டம்பர் மாதம் 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து முதல்-மந்திரி தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டம் 2 மாதங்களுக்கு முன்பே நடைபெறும். ஆனால் இந்த முறை ஆட்சி மாற்றம் மற்றும் மழை வெள்ளம் காரணமாக இந்த குழு கூட்டம் நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது.

வட கர்நாடகத்தில் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளதால், அப்பகுதி மக்களின் வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் முதல்- மந்திரி எடியூரப்பா தலைமையில் மைசூரு தசரா விழா குறித்த உயர்மட்ட குழு கூட்டம் பெங்களூருவில் கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், மைசூரு மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மைசூரு தசரா விழாவை எவ்வாறு நடத்துவது என்று ஆலோசனை நடத்தப்பட்டது.

கர்நாடகத்தின் பல பகுதிகளில் வரலாறு காணாத வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், விழாவை நடத்துவது குறித்து முதல்-மந்திரியிடம் சில விவரங்களை அதிகாரிகள் கேட்டனர். இந்த ஆண்டு தசரா விழாவை எப்போதும் போல் கொண்டாடுவது என்று முடிவு எடுக்கப்பட்டதாக எடியூரப்பா கூறினார். உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவை நடத்துவது குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் பெங்களூருவில் இன்று(அதாவது நேற்று) நடைபெற்றது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தசரா விழாவை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு தசரா விழாவை தொடங்கி வைக்க எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவை அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மைசூரு தசரா விழாவை எந்த குறையும் இல்லாமல் எப்போதும் போல் இந்த ஆண்டும் கொண்டாட ஏற்பாடுகள் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கலாசார ரீதியான அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால் இந்த முறை கர்நாடகத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

மைசூருவில் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.21½ கோடி ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கு மந்திரிசபையில் ஒப்புதல் பெற்று உடனே விடுவிக்கப்படும். குமாரசாமி ஆட்சியில் போன் ஒட்டுகேட்கப்பட்டதாக வெளியான தகவலை கவனித்தேன். இதுபற்றி விசாரணை நடத்துவது குறித்து தலைமை செயலாளருடன் கலந்து ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும்.”

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 

Next Story