கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவிற்கு புது வரவு, அரிய வகை பெலிக்கான் பறவை, குஞ்சு பொரித்தது


கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவிற்கு புது வரவு, அரிய வகை பெலிக்கான் பறவை, குஞ்சு பொரித்தது
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 11:06 PM GMT)

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் அரிய வகையை சேர்ந்த பெலிக்கான் பறவை குஞ்சு பொரித்தது.

கோவை, 

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான பாம்புகள், கடமான்கள், புள்ளி மான்கள், ஈமு கோழிகள், முதலைகள் உள்பட ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து பறவைகள், விலங்குகளை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த பூங்காவில் அரிய வகையை சேர்ந்த வெளிநாட்டு பறவையான பெலிக்கான் பறவைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு ஒரு பெண் பெலிக்கான் பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்து உள்ளது. பூங்காவின் புதிய வரவான இந்த பெலிக்கான் குஞ்சுவை பொதுமக்கள் ஆவலுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இதுகுறித்து பூங்கா டாக்டர் செந்தில்நாதன் கூறியதாவது:-

பெலிக்கான் பறவைகள் அளவில் பெரியதாக காணப்படும். பிற பறவைகளை போல் இன்றி நீண்ட தூரத்திற்கு பறந்து செல்லும் தன்மை உடையது. இதனை தமிழில் கூழைக்கிடா என்று அழைக்கின்றனர். காடுகளில் வாழும் பெலிக்கான் பறவைகள் அதிகபட்சம் 15 முதல் 25 ஆண்டுகள் வரை வாழும். ஆனால் பூங்காக்களில் வளர்க்கப்படும் பெலிக்கான் பறவைகள் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

ஒரு பெண் பெலிக்கான் பறவை ஒருமுறை 2 அல்லது 3 முட்டைகள் மட்டுமே இடும். இதனை 25 முதல் 30 நாட்கள் வரை அடைகாக்கும். இதில் 1 அல்லது 2 முட்டைகளில் இருந்து மட்டுமே குஞ்சு பொரித்து வெளியே வரும். இந்த குஞ்சுகள் ஒரு ஆண்டு வரை தாயின் பராமரிப்பில் இருக்கும்.

கோவை வ.உ.சி. பூங்காவில் 6 ஆண் பெலிக்கான் பறவைகள், 3 பெண் பெலிக்கான் பறவைகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பறவைகள் முட்டை இடாமல் இருந்து வந்தன. இந்த நிலையில் ஒரு பெண் பறவை 3 முட்டைகள் இட்டது. இதையடுத்து அந்த பறவையை நாங்கள் கவனமாக பராமரித்து வந்தோம்.

அந்த பறவை உள்ள கூண்டிற்குள் சுத்தம் செய்ய ஒரே ஒரு நபர் மட்டுமே பணி அமர்த்தப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஒரே ஒரு முட்டை மட்டும் பொரித்து குஞ்சு வெளியே வந்தது. இதையடுத்து பெலிக்கான் குஞ்சை பார்க்க வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது 50 நாட்களை கடந்த பின்னர் அந்த குஞ்சு நடக்க தொடங்கிய நிலையில் பார்வையாளர்கள் பார்வையிட அனுமதித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பறவை ஆர்வலர்கள் கூறும்போது, பெலிக்கான் பறவைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. ஒருமுறை 3 முட்டைகள் மட்டுமே இடுவதால், இதன் எண்ணிக்கை அதிகரிப்பது இல்லை. தற்போது வ.உ.சி. பூங்காவில் பெலிக்கான் குஞ்சு பொரித்து உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

Next Story