சேலத்தில் பரபரப்பு, சிறுவனை திருநங்கையாக மாற்ற முயற்சியா? உறவினர்கள் சாலை மறியல்


சேலத்தில் பரபரப்பு, சிறுவனை திருநங்கையாக மாற்ற முயற்சியா? உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Aug 2019 4:45 AM IST (Updated: 15 Aug 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சிறுவனை திருநங்கையாக மாற்ற முயற்சி நடந்ததாக கூறி அவனது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், சென்னைக்கு சென்று அங்குள்ள திருநங்கைகளுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டதாக தெரிகிறது. பின்னர் அந்த சிறுவன், தான் பெண்ணாக மாற வேண்டும் என கூறி இருக்கிறான். ஆனால் 18 வயது பூர்த்தியாகாததால் அங்கிருந்த திருநங்கைகள், சேலத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்த சிறுவனை தாங்கள் அனுப்பி வைக்கிறோம். அவனை விசாரித்து பெற்றோரிடம் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்த சிறுவன் சென்னையில் இருந்து நேற்று சேலம் வந்துள்ளான். இதைத்தொடர்ந்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட சிறுவனின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்து செல்லுமாறு கூறினர். இதனால் மகனை தேடி நேற்று காலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் ராமகிருஷ்ணா பூங்கா அருகில் உள்ள அந்த தொண்டு நிறுவனத்திற்கு வந்தனர்.

அப்போது, தங்களது மகனை திருநங்கையாக மாற்ற முயற்சி எடுக்கிறீர்களா? எனக்கூறி அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் ராமகிருஷ்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சேலத்தை சேர்ந்த சிறுவனை, திருநங்கையாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டதா? அதற்கு தொண்டு நிறுவன ஊழியர்கள் உடந்தையாக இருந்தார்களா? சென்னையில் உள்ள திருநங்கைகளுடன் சேலம் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story