பாளையங்கோட்டை பெருமாள்புரம் பெரியகுளத்தில் குடிமராமத்து பணி - கலெக்டர் ஷில்பா தொடங்கிவைத்தார்


பாளையங்கோட்டை பெருமாள்புரம் பெரியகுளத்தில் குடிமராமத்து பணி - கலெக்டர் ஷில்பா தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:32 PM GMT (Updated: 14 Aug 2019 11:32 PM GMT)

பாளையங்கோட்டை பெருமாள்புரம் பெரியகுளத்தில் குடிமராமத்து பணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள பெரியகுளத்தினை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நெல்லை மாநகராட்சி 24, 25-வது வார்டு நலச்சங்கம் உள்ளிட்ட 17 நலச்சங்கங்கள் மூலம் குடிமராமத்து பணி தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த பணியை கலெக்டர் ஷில்பா கொடியசைத்து தொடங்கி வைத்து பணி மேம்பாட்டிற்்கு உரிய ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஊராட்சிக்குட்பட்ட 118 சிறு பாசன குளங்களிலும், 215 ஊருணிகளிலும் குடிமராமத்து பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதில் 118 சிறு பாசன குளங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.5 கோடியே 90 லட்சம் மதிப்பிலும், 218 ஊருணிகளில் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 கோடியே 18 லட்சம் மதிப்பில் என மொத்தம் ரூ.8 கோடியே 8 லட்சம் மதிப்பிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் கண்மாய்களை சரிசெய்யவும் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பிலும் குடிமராமத்து பணிகள் ரூ.23 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே பொதுப்பணித்துறை மூலம் தமிழக அரசு 185 பணிகளை ரூ.42 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதுதவிர மாவட்டம் முழுவதும் 200 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு அரசு நிதிகள் இல்லாமல் குடிமராமத்து பணிகள் தன்னார்வ தொண்டர்கள், புரவலர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் எதிர்காலத்தில் மழைநீர் சேகரிக்கப்படுவதோடு நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, அண்ணா பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி பணிகள் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சக்திநாதன், அரசு அலுவலர் ஒன்றியத்தின் முன்னாள் மாவட்ட தலைவர்கள் சீத்தாராமன், நல்லபெருமாள், ஓய்வு பெற்ற துணை தாசில்தார் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story